ஜி.எஸ்.டி. வரி வசூல் முறையால் மாநில அரசுக்கு எந்த பலனும் இல்லை - முதல் அமைச்சர் நாராயணசாமி

ஜி.எஸ்.டி. வரி வசூல் அமல்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம் மாநில அரசுக்கு எந்த பலனும் இல்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2018-09-26 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர். இவர் அகில இந்திய வணிக சம்மேளனத்தின் துணைத் தலைவராக தேர்வாகி உள்ளார். இதற்கான பாராட்டு விழா புதுவை சித்தன்குடியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், பழனி அடைக்கலம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிவசங்கருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை வணிகர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்கு வரியாக செலுத்துகிறார்கள். வியாபாரிகள் அரசின் அங்கமாக விளங்குகிறார்கள். புதுவை வணிகர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வணிகர்களுக்கு உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதால் மத்திய அரசுக்குத்தான் வருமானம் பெருகி உள்ளது. நமது மாநிலத்திற்கு எந்த பலனுமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்