டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

செய்யாறில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-09-26 22:45 GMT
செய்யாறு,

செய்யாறு தாலுகா விநாயகபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க கலால்துறையினர் ஏற்பாடு செய்தனர். இதனையொட்டி விநாயகபுரம் செல்லும் சாலையில் ராதிகா என்பவருக்கு சொந்தமான வீட்டில் அரசு டாஸ்மாக் கடை திறக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு கலால் தாசில்தார் பாபுவிடம் பொதுமக்கள் மனு அளித்து கடையை திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை டாஸ்மாக் நிர்வாகத்தினர் அங்கு வாகனத்தில் கொண்டு வந்து இறக்கினர். பின்னர் பூஜை செய்து அவசர, அவசரமாக விற்பனையை தொடங்கினர்.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், கடையை அகற்ற கோரியும் விநாயகபுரம் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக செய்யாறு தாசில்தார் மகேந்திரமணி, அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது சமரசத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு கலால் தாசில்தார் பாபு வந்தார். அவரிடம் “நாங்கள் கடை திறக்கக்கூடாது என மனு கொடுத்தும் எங்களின் கோரிக்கைக்கு மதிப்பில்லையா? எப்படி டாஸ்மாக் கடையை திறக்கலாம்” என கேட்டு அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுபாட்டில்களை ஊழியர்கள் வாகனங்களில் ஏற்றி கடையை வாய்மொழி உத்தரவாதம் அடிப்படையில் மூடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதன்பின் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்