வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைத்த அரசு டாக்டர்கள்: கார் டிரைவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து அரசு டாக்டர்கள் தைத்ததால் பாதிக்கப்பட்ட கார் டிரைவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசு செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தஞ்சை நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2018-09-27 22:30 GMT
தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மணலூர் கிராமம் புதுக்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சுப்பையன். இவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 40). சென்னையில் கார் டிரைவராக பணி புரிந்து வந்த இவர், கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி பல்லாவரம் பகுதியில் கார் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென கார், விபத்தில் சிக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அப்பகுதியை சேர்ந்த சிலர், மீட்டு சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அங்குள்ள டாக்டர்களின் ஆலோசனைப்படி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வயிற்று பகுதியில் டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு வயிற்று வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. இதனால் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

கிருஷ்ணமூர்த்திக்கு டாக்டர்கள் குழுவினர் ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை செய்து பார்த்தனர். அப்போது அவரது வயிற்று பகுதியில் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது டாக்டர்களின் கவனக்குறைவால் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த கத்தரிக்கோலை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி இழப்பீடு கேட்டு தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், டாக்டர்களின் சேவை குறைபாட்டினால் முன்பு போல் இயல்பாக வாகனத்தை ஓட்ட முடியவில்லை. வயிற்றில் வலி ஏற்படுவதால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் முகமதுஅலி விசாரணை செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சேவை குறைபாட்டினால் கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பண இழப்பு, கால விரயம் ஆகியவற்றிற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

இந்த தொகையை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர், மருத்துவக்கல்வி இயக்குனர், சுகாதாரம் மற்றும் குடும்ப நல முதன்மை செயலாளர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ இந்த உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற 1 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்