ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2018-09-27 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடகா, கேரள மாநிலங்களில் கடந்த ஜூலை மாதம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டின. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அங்கிருந்து ஒகேனக்கல் அருவிகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. கரைபுரண்டு ஓடிய காவிரிநீர் ஒகேனக்கல் அருவிகளை மூழ்கடித்ததால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போதும் இந்த தடை நீடிக்கிறது.

இதற்கிடையே கர்நாடகத்தில் மழை அளவு குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. கடந்த 24-ந்தேதி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதன்பின்னர் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்தது. காலை 8 மணியளவில் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இவ்வாறு கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்