திருமணமான 3 நாளில் காதல் மனைவி ஓட்டம்: கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை

சேலம் அருகே திருமணமான 3 நாளில் காதல் மனைவி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால் கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-09-27 22:00 GMT
கருப்பூர், 


சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா கோட்டகவுண்டம்பட்டி காலனியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 26), என்ஜினீயரான இவர் சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், அதே வணிக வளாகத்தில் பணியாற்றி வந்த தீபா(28) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து செல்லதுரை, தனது பெற்றோரிடம் இது தொடர்பாக பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார்.

அதன்பேரில் கடந்த 23-ந் தேதி ஓமலூரில் உள்ள செல்லதுரையின் குலதெய்வ கோவிலில் அவர்களுக்கு செல்லதுரையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து செல்லதுரை காதல் மனைவியுடன் அன்று இரவு தனது வீட்டில் தங்கினார். மறுநாள் காலையில் தீபா திடீரென தான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அன்று ஒரு நாள் முழுவதும் அவர் அந்த வணிக வளாகத்தில் பணிபுரிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பணி முடிந்து அவர் கணவர் வீடான கோட்டகவுண்டம்பட்டிக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்த உறவினர்கள், மாமனார், மாமியார் ஆகியோர் தீபாவிடம் உங்கள் திருமணத்தை பதிவு செய்து விடலாம் என்று நினைக்கிறோம். எனவே உனது கல்விச்சான்றுகள் மற்றும் பிறந்த தேதி ஆவணங்களை தருமாறு அவர்கள் தீபாவிடம் கேட்டுள்ளனர். அப்போது எனக்கு எந்த உறவினர்களும் இல்லை. எனது மாமா மட்டுமே உள்ளார். எனது பெரியம்மா மகள் வீட்டில் இருந்து தான் நான் வேலைக்கு வந்து சென்றேன். எனக்கு தாய், தந்தை இல்லை என்றும், சொந்த ஊர் திருப்பூர் என்றும் அவர் முரண்பாடாக கூறியுள்ளார்.

மேலும் தனது கணவரிடம் நாம் தான் திருமணம் செய்து விட்டோமே? ஏன் பதிவு செய்ய வேண்டும் என்று தீபா கேட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சினை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மறுநாள் சான்றிதழ்களை கொண்டு வருவதாக தீபா கூறியுள்ளார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் வேலைக்கு சென்று விட்டு சான்றிதழ் எடுத்து வருவதாக கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறிவிட்டு தீபா அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் அன்றைக்கு வேலைக்கு செல்லவில்லை என்பதுடன், எங்கே சென்றார் என்பதும் தெரியவில்லை.

இதையடுத்து தீபாவிடம் செல்போனில் கணவர் செல்லதுரை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் உறவினர் வீட்டில் உள்ளேன். உங்கள் வீட்டுக்கு வரமுடியாது என்று கூறி அவர் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பெண்ணை பற்றி எந்த விவரமும் தெரியாமல் ஏன் திருமணம் செய்தாய்? என்று பெற்றோரும், புதுமாப்பிள்ளை செல்லதுரையிடம் கேட்டுள்ளனர். ஏற்கனவே காதல் மனைவி திருமணமான 3 நாட்களில் தன்னை விட்டு பிரிந்து ஓட்டம் பிடித்த நிலையில், பெற்றோரும் திட்டுகிறார்களே என்று நினைத்து செல்லதுரை விரக்தியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு முதல் அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் மறுநாளான நேற்று முன்தினம் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த பெற்றோர் இது குறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து புதுமாப்பிள்ளை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கோட்டகவுண்டம்பட்டியில் செல்லதுரையின் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலையில் அவரது பிணம் மிதந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் செல்லதுரையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஓமலூர் தீயணைப்பு படையினர் மற்றும் கருப்பூர் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த செல்லதுரையின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் புதுமாப்பிள்ளை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக, செல்லதுரையின் பெற்றோர், உறவினர்கள் கூறும்போது, ‘பதிவு திருமணம் செய்ய சான்றிதழ்கள் கேட்டதால் திருமணமான 3 நாளில் புதுப்பெண் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால், மனம் உடைந்து செல்லதுரை தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில், மாயமாகி உள்ள புதுப்பெண் தீபாவை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் செல்லதுரையின் தற்கொலைக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்