கருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.

கருணாநிதி இறந்த பிறகு அவருக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் எனபேரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

Update: 2018-09-28 23:15 GMT

பேரூர்,

அ.தி.மு.க. அரசை கண்டித்து பேரூரில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்துக்கு நகர செயலாளர் ப.அண்ணாதுரை வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மருதமலை சேனாதிபதி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், துணை செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க. கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது, தி.மு.க.வுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு எழுச்சியை இக்கூட்டம் காட்டுகிறது. அண்ணாவிடமே வாதம் செய்தவன் நான். என்னை ‘பியுன்‘ என அமைச்சர் வேலுமணி கூறியதில் வருத்தமில்லை.

ஜெயலலிதா டான்சி நிலம் வாங்கி கொடுத்த விவகாரத்தில் அவருக்கு தண்டனை பெற்றுத்தந்தது தி.மு.க என்பது யாராலும் மறுக்க முடியாது.

எங்களது தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் யாராவது மீது ஊழல் குற்றம் நிரூபணம் ஆகியுள்ளதா? கோவை மாநகராட்சியில் மட்டும் அமைச்சருக்கு வேண்டப்பட்ட கம்பெனிகளுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வரை பணிகள் நடந்துள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறைக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மட்டும் எல்.இ.டி லைட், குப்பைத்தொட்டி உள்ளிட்ட பல்வேறு உபகரணப்பொருட்கள் வாங்கியதில் அமைச்சருக்கு சாதகமான கம்பெனிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

நான் கருணாநிதியால் பயிற்றுவிக்கப்பட்டவன். ஆதாரமில்லாமல் எந்த வழக்கும் போட மாட்டேன். கருணாநிதி இறந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடமில்லை என்று கூறியவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

மேலும் செய்திகள்