கும்பகோணம் அருகே பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு

கும்பகோணம் அருகே போலீசார் என கூறி பெண்ணிடம் 11 பவுன் நகைகளை பறித்து சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-09-30 23:09 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாகக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது47). இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வசந்தா (42). இவர் வெளிநாட்டில் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

தற்போது விடுமுறையில் நாகக்குடி வந்துள்ள வசந்தா, சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் தங்களை போலீசார் என, வசந்தாவிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

போலீசார் என கூறியதால் வசந்தா, 4 பேரையும் வீட்டுக்குள் அனுமதித்தார். இதையடுத்து 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி வசந்தா அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் உள்பட 11 பவுன் நகைகள் மற்றும் அவருடைய ஏ.டி.எம். கார்டு, 2 செல்போன்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் காசியய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தாவிடம் கைவரிசை காட்டிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சுவாமிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்