தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 15 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 15 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2018-10-01 22:00 GMT
தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தூத்துக்குடி சுப்பையாபுரத்தை சேர்ந்த பாலகுமார், திரேஸ்புரத்தை சேர்ந்த ஜோயல் ராஜா, கிளின்டன், அண்ணாநகரை சேர்ந்த தங்க ஈசுவரன், தேவர் காலனியைச் சேர்ந்த தங்கம், மீளவிட்டானை சேர்ந்த ராஜாசிங் உள்ளிட்ட 15 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த கலவரத்தின் போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நாங்கள் காயம் அடைந்தோம். நாங்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எங்களுக்கு அரசு வேலை வழங்கி எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநகர செயலாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் ஜாய்சன் மற்றும் மாணவர்கள் பலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 84 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் ஏழை, விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உயர்கல்வியை பறிக்கும் வகையில் தமிழில் தேர்வு எழுதும் நடைமுறையை ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது 74 சதவீதத்துக்கு கீழ் வருகை பதிவு இருந்தால் பாடத்துக்கு ரூ.500 என கட்டணம் கட்ட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் ஆய்வு மாணவர்களுக்கு பதிவு கட்டணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் செயலாளர் ராஜா கொடுத்த மனுவில், தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றின் வடகால் பாசனத்தில் கோரம்பள்ளம் குளத்திலும், உப்பாற்று ஓடையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திரை கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டின் வடகால்-தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி பல ஆயிரம் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

வடகால் வாய்க்கால் மூலம் வயல்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகளில் தேக்கு, வாகை போன்ற மரங்கள் விழுந்து கிடக்கின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால்களில் தண்ணீர் சீராக செல்வதற்கு தடையாக உள்ள மரம், செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆறுமுகநேரியை சேர்ந்த நிதி நிறுவன முகவர் முருகேசபாண்டியன் மற்றும் முகவர்கள் பலர் கொடுத்த மனுவில், 2006-ம் ஆண்டு மதுரையை தலைமை இடமாக கொண்ட ஒரு நிதி நிறுவனம் சிறுசேமிப்பு திட்டத்தில் நிலம் அல்லது பணமாக பெறலாம் என்று கூறி தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் மக்களிடம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல், நீதிமன்றம் மூலம் நாங்கள் கோரியும் முறையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமலும் இழுத்தடித்து வருகிறது. இந்த நிறுவனத்தினர் மக்களிடம் பெற்ற பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.ம.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் இசக்கிமுத்து கொடுத்த மனுவில், ஏரல் தாலுகா ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதிநாதபுரம் முதல் மளவராய நத்தம் வரை தார்சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன.

தற்போது அந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று என்று கூறிஇருந்தார். 

மேலும் செய்திகள்