கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

Update: 2018-10-03 23:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து மீனவர் சங்க கூட்டம் சேசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஏற்கனவே கோவாவில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், இதில் கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவர்களும் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராமேசுவரம் தீவு பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். டீசல் விலை உயர்வை கண்டித்தும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற அனைத்து மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும், பழுதடைந்த படகுகளுக்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இலங்கை அரசுடைமையாக்கப்பட்ட தமிழக படகுகளை விடுவிப்பதுடன், அது சம்பந்தமான அவசர சட்டத்தை இலங்கை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்று அனைத்து படகுகளும் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக பரபரப்பாக காணப்படும் துறைமுகப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

வருகிற 8-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர் சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்