பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-10-04 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு கோவிலில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று இரவு விநாயகர் பூஜை, அனுக்ஞை, கும்பபூஜை, திரவியஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. இதனைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு மகாஅபிஷேகமும், கலசதீர்த்த அபிஷேகமும் நடந்தது. பின்பு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

பின்னர் ஹோம பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். குருப்பெயர்ச்சி விழாவில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் கும்ப ராசிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பரிகார பூஜை செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்துசமயஅறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் முருகையா, பெரம்பலூர் மதனகோபாலசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் வை.மணி மற்றும் தர்மபரிபாலன சங்கத்துடன் இணைந்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் பெரம்பலூரில் தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் குருப் பெயர்ச்சியை ஒட்டி நேற்று இரவு சிறப்பு ஹோமமும், நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. யாகசாலை பூஜைகளை கோவில் அர்ச்சகர் சஞ்சீவி பிரசாத் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் உள்பட சோடச அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது.

மேலும் செய்திகள்