கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முறையான விசாரணை கோரி உறவினர்கள்- மாணவர்கள் சாலை மறியல்

திருமயம் அருகே ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் வழக்கில் முறையான விசாரணை கோரி உறவினர்கள்-மாணவர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-04 23:00 GMT
திருமயம்,

அந்தமான் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் ரமேஷ் (வயது 19). இவர் திருமயம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி, 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் ரமேஷ் சாவு குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ரமேஷின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை ஒன்று திரண்டு மாணவர் சாவுக்கு முறையான விசாரணை கோரி திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாணவர்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்