பொதுஇடத்தில் சிறுநீர் கழித்தவரை மிரட்டி நகை பறித்த போலீஸ்காரர் கைது

பொதுஇடத்தில் சிறுநீர் கழித்தவரை மிரட்டி தங்கச்சங்கிலி, மோதிரம் பறித்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-05 22:48 GMT
தானே,

ரத்னகிரி மாவட்டம் கேட் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் நல்வாடே. இவர் கல்வாவில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு செல்ல ரெயில் மூலம் தானே நிலையம் வந்து இறங்கினார். பின்னர் தானே அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே வந்தபோது மறைவான இடத்தில் சிறுநீர் கழித்தார்.

அப்போது அங்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் சுபாஷ் நாக்ரே (வயது50) மற்றும் ஊர்காவல்படை வீரர் புஷன் மோரே (28) ஆகியோர் சேர்ந்து பொதுஇடத்தில் சிறுநீர் கழித்ததற்காக சஞ்சயை மடக்கி பிடித்தனர். பின்னர் இதற்கு அபராதம் செலுத்தக்கோரி ரூ.10 ஆயிரம் தரும்படி கேட்டனர்.

பணம் தரவில்லை என்றால் போலீஸ் நிலையம் அழைத்து செல்வதாக மிரட்டினர். இதற்கு சஞ்சய் என்னிடம் பணம் இல்லை என்றார். இருப்பினும் அவர்கள் சஞ்சயிடம் உள்ள தங்கச்சங்கிலி, மோதிரத்தை விற்று பணம் தரும்படி கேட்டனர். இதனை தொடர்ந்து சஞ்சய் அருகில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை விற்க சென்றார். அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த நகைக்கடைக்காரர், நகைகளை வாங்க மறுப்பு தெரிவித்தார்.

இதனால் போலீஸ்காரர் சுபாஷ் நாக்ரே, புஷன் மோரே அவரிடம் இருந்த தங்கச்சங்கிலி, மோதிரத்தை பறித்து கொண்டு சஞ்சயை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்ற சஞ்சய் நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தானேவிற்கு வந்து அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் உள்பட 2 பேரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சஞ்சயை மிரட்டி தங்கச்சங்கிலி, மோதிரம் பறித்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸ்காரர், ஊர்காவல்படை வீரர் 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்