சாலையோர பள்ளத்தில் பாய்ந்து அந்தரத்தில் தொங்கிய பஸ்

மும்பை - புனே நெடுஞ்சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பஸ் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. அடர்ந்து நின்ற மரங்களால் அதில் இருந்த பயணிகள் 50 பேர் உயிர் தப்பினர்.

Update: 2018-10-05 23:03 GMT
மும்பை,

ராய்காட் மாவட்டம் கோபோலியை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் அகமதுநகர் பதார்டி பகுதியில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தனர். பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்து அவர்கள் இரவு தனியார் பஸ்சில் கோபோலி திரும்பி கொண்டிருந்தனர்.

பஸ்சில் 20 ஆண்கள், 20 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் என 50 பேர் இருந்தனர். இரவு 11.15 மணியளவில் அந்த பஸ் மும்பை - புனே ெநடுஞ்சாலையில் சிங்ரோபா சவுக் அருகில் வந்து கொண்டிருந்ததது.

அப்போது, திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி அங்குள்ள சாலையோர பள்ளத்தை நோக்கி பாய்ந்தது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் திடுக்கிட்டு அலறினர்.

ஆனால் அந்த பகுதியில் பெரிய மரங்கள் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அந்த பஸ் மரங்கள் மீது மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர். இருப்பினும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விடும் நிலையில் தொங்கி கொண்டிருந்ததால் அவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தனர்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் கூடவே இருந்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த சாலையோரத்தையொட்டி சுமார் 100 அடியில் பெரிய பள்ளம் இருக்கிறது. அந்த இடத்தில் அடர்ந்த மரங்கள் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் பஸ் அந்த பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

இந்த நிலையில், அந்த பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பிரேக் பழுது காரணமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதாக தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்