சபரிமலையில் பெண்கள் அனுமதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட கோர்ட்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

Update: 2018-10-06 23:00 GMT
கரூர்,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் மகர விளக்கு பூஜைக்கு 48 நாட்கள் விரதம் இருந்து, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம்செய்கின்றனர். இந்த கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் ஆண்-பெண் சமத்துவத்தை சுட்டி காட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனத்திற்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பானது பொதுமக்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் பெற்று விமர்சனத்திற்குள்ளாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அய்யப்பன் கோவிலில் 10முதல்50 வயது வரையுள்ள பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கோர்ட்டு வழங்கிய தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக்கோரியும், சபரிமலையின் புனிதத்தை காக்க பாரம்பரிய நடைமுறையினையே பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கரூர் மாவட்ட அனைத்து அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் கனகசபாபதி தலைமை தாங்கினார். அமைப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

இதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருவோர் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கோர்ட்டு தீர்ப்பு வந்தாலும் சபரிமலையின் புனிதத்தை காப்போம், அந்த கோவிலின் ஆகம விதிகளை தொடர்ந்து பின்பற்றுவோம், 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்லமாட்டோம் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி உறுதிமொழியினை அய்யப் பன் உருவப்படம் முன்பு எடுத்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் விரதம் கடைபிடித்து ஆன்மிகத்தை நாடுவதன் மூலம், அவர்களது உடலில் ஏற்படும் அந்த குறிப்பிட்ட மாற்றத்திற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை உள்ளிட்ட காரணங்களால் தான் சபரிமலைக்கு நீண்ட காலமாக பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோர்ட்டு தீர்ப்பு அளித்த போதிலும் அதனை தங்களது உரிமையாக கருதி பெரும்பாலான பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள். எனவே சபரிமலையின் பாரம்பரிய விதிகளை தளர்த்துவது தவறு என அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்