குழந்தைகளின் எடையை கணக்கிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு ஆலோசனை

மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின்கீழ், கரூரில் குழந்தைகளின் எடையை கணக்கிட்டு அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.

Update: 2018-10-06 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 1,052 அங்கன்வாடி மையங்களிலும் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எடைகுறைவுடன் குழந்தைகள் பிறப்பதை தடுத்தல், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகையை குறைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான சத்தான உணவுப்பொருட்களை வழங்குதல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைக்கும் வகையில் அவர்களுக்கு சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை வழங்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் இந்த திட்டத்தின்கீழ் நடக்கின்றன.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி போஷன் அபியான் திட்டத்தின்கீழ் செப்டம்பர் 1 முதல் 30-ந் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அங்கன்வாடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எடை அளவு எடுக்கப்பட்டு வளர்ச்சி விவரம் கண்காணிக்கப்பட்டது. பின்னர் எடை குறைவாக இருந்த குழந்தைகளுக்கு அவர்களது உணவு முறைகளை மாற்றி அமைப்பது குறித்தும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் 5,200 கர்ப்பிணிகளுக்கு எடை அளவு எடுக்கப்பட்டு கர்ப்பகால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

8 வட்டாரங்களில் 1,040 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. 4,400 பாலூட்டும் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தை பராமரிப்பு மற்றும் உணவூட்டும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு, மருத்துவம் ஊரக வளர்ச்சி துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை பற்றியும், தன்சுத்தம் பற்றியும் கண்காட்சி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் போஷன்அபியான் திட்டம் குறித்த உறுதிமொழியும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. அனைத்து அங்கன்வாடி மையங்கள் உட்புறம், வெளிப்புறம் மற்றும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது. அங்கன்வாடி மைய அளவில் உள்ளூரில் கிடைக்கும் உணவுப்பொருட்களைக்கொண்டு தயார் செய்யப்படும் உணவுகள் குறித்து கண்காட்சி மற்றும் மகளிருக்கான சமையல் போட்டி நடத்தப்பட்டன. மேலும் போஷன் அபியான் திட்ட நோக்கங்கள் குறித்து உள்ளூர் சந்தை, வீடுகள், கடைகள், பஸ் நிலையங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. எனவே இந்த திட்டத்தின் கீழ் மக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்