வேலூர் ஜெயில்: 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான கைதி - முதியோர் இல்லத்தில் மனைவியுடன் உருக்கமான சந்திப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவையொட்டி 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான ஆயுள் தண்டனை கைதி, முதியோர் இல்லத்தில் இருந்த தனது மனைவியை சந்தித்தது உருக்கமாக அமைந்தது.

Update: 2018-10-06 23:15 GMT
வேலூர்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வேலூர் ஆண்கள் ஜெயிலில் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் என்ற சுப்பிரமணியம் (வயது 65) என்பவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார்.

அவரது விடுதலையும் அவர் காதல் மனைவியுடன் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வும் வருமாறு:-

இலங்கையை சேர்ந்தவர் பக்கா என்றழைக்கப்படும் விஜயா (60). இவர் இலங்கை தமிழர் பிரச்சினையின் போது அகதியாய் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தவர். அகதியாய் வந்த அவர் தெருக்களில் நடனம் ஆடி அதில் வரும் வருவாயை கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். கலைக்கூத்தாடியான விஜயாவின் நடனத்தால் மிகவும் கவரப்பட்டு அவரை காதலித்தார். இந்த காதலை அவரது வீட்டார் ஏற்க மறுத்தனர். இதனால் சுப்பிரமணியம் 1985-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி விஜயாவுடன் சேர்ந்தார். அதை தொடர்ந்து விஜயா, சுப்பிரமணியத்துக்கு நடனம் ஆடவும் கற்றுக்கொடுத்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு நடனமாடி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தனர். நடனமாட செல்லும் இடங்களில் தங்கி தங்களது அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்துள்ளனர்.

ஒருநாள் இரவு இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை காலம் புரட்டிப்போட்டது. இவர்கள் நடனம் ஆடி முடித்த களைப்பில் சாலை ஓரம் உறங்கிக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு பிரச்சினையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சூலூர் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் 1990-ம் ஆண்டு கைது செய்தனர். இருவருக்கும் கோவை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுக்காக வாதாட யாரும் இல்லாத நிலையில் இருவரும் 25 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். சிறையில் இருந்த விஜயாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனநோயாளியாக மாறினார். அவரது பேச்சும் பறிபோனது. பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவர் எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்தார். பின்னர் அவர் வேலூர் அருகே அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார். அவர், தனது காதல் கணவருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தார்.

இந்நிலையில் தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவையொட்டி நேற்று வேலூர் மத்திய சிறையில் இருந்த சுப்பிரமணியம் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவர் தனக்காக காத்திருக்கும் மனைவியை காண முதியோர் இல்லம் சென்றார்.

அங்கு தனது கணவருக்காக 28 ஆண்டுகள் காத்திருந்த விஜயா சிறு குழந்தையாக மாறி சுப்பிரமணியத்தை பார்த்ததும் ஓடிச்சென்று கையை பிடித்து அழுது கண்ணீர் வடித்தார். இந்தநிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

சுப்பிரமணியத்தை மாமா என்றழைக்கும் விஜயா தனது மாமாவை முதியோர் இல்லத்தில் கூடியிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்தார். விஜயாவை பார்த்த சுப்பிரமணியம் 20 முறையேனும் நலம் விசாரித்து சாப்பிட்டாயா.. சாப்பிட்டாயா.. என கேட்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அவரது வாழ்வில் காதல் அத்தியாயம் மீண்டும் மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பறிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து சுப்பிரமணியம் கூறும்போது, எங்களை காப்பாற்றிக்கொள்ள செய்த செயலால் நாங்கள் தண்டனையை அனுபவித்து விட்டோம். இனி நாங்கள் இருவரும் எங்களது சொந்த ஊருக்கே செல்ல இருக்கிறோம். அங்கு எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் கிடைக்கும் வேலையை வைத்து வாழ்ந்து கொள்வோம். எனது உயிர் இருக்கும் வரை அவளை கைவிடமாட்டேன். நான் காப்பாற்றுவேன். இனி அவளுக்கென்று என்னை விட்டால் யாரும் கிடையாது. அவளுக்கு ஒன்றும் தெரியாது. என்னை மட்டுமே நம்பி உள்ள அவளை நான் காப்பாற்றவில்லையெனில் அந்த பாவம் என்னை சும்மாவிடாது என்றார்.

மேலும் செய்திகள்