கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா திட்டம்

கர்நாடகத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும் அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது.

Update: 2018-10-06 23:47 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா கட்சி, கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா பக்கம் இழுத்து கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாததால் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்தது.

பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலிலும் ஆபரேஷன் தாமரை மூலம் மாநகராட்சி கவுன்சிலர்களை இழுக்க பா.ஜனதா முயன்றது. அப்போதும் பா.ஜனதாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் பா.ஜனதா தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அதே நேரத்தில் ஆபரேஷன் தாமரை மூலமாக எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களை இழுக்க முயன்றதால் பா.ஜனதா கட்சிக்கு கெட்ட பெயர் உண்டானது. இதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் முயற்சியை கைவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, பா.ஜனதாவால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. கூட்டணி ஆட்சி கர்நாடகத்தில் நீடித்தால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு எப்படியாவது முதல்-மந்திரியாகி விட வேண்டும் என்று எடியூரப்பா திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த முறை ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்தபோது எடியூரப்பாவுக்கு, ஸ்ரீராமுலு மற்றும் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்து, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். மற்ற பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்பதால் மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா மேலிடமும் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியிலும், எடியூரப்பாவும், மற்ற மூத்த தலைவர்களும் ஈடுபட இருப்பதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பா.ஜனதா ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்