கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-08 21:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மனு கொடுத்தும் தீர்வு கிடைக்காத சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நாலாபுறமும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிர்வேல் மனைவி சந்திரா (வயது 60) என்பவர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து திடீரென தான் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தன் உடலில் ஊற்றிக்கொள்ள முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து சந்திராவை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சந்திரா கூறுகையில், எனது வீட்டிற்கு செல்லக்கூடிய வழிப்பாதையை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் ஆக்கிரமிப்பு செய்து வேலி போட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றார்.

இதேபோல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி அனுசுயா (40) என்பவர் தான் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்ற முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அனுசுயாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எங்களுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நிலம் தருவதாக கூறியதின்பேரில் நாங்கள் அவரிடம் 4½ பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொடுத்தோம். நிலம் தருவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை இருந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது கணவர் சக்திவேல் உடல்நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். அதன் பிறகு அந்த நபர், எனக்கு நிலமும் தரவில்லை, நாங்கள் கொடுத்த நகை, பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து செஞ்சி போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.

இதையடுத்து சந்திரா, அனுசுயா ஆகிய இருவரிடமும் அரசு அலுவலகம் முன்பு இதுபோன்று அசம்பாவித செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்