ஒரத்தநாடு அருகே: வாய்க்காலில் ‘திடீர்’ உடைப்பு; 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் நேற்று காலை ‘திடீர்’ உடைப்பு ஏற்பட்டது. இதனால் 500 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் தஞ்சை-பட்டுக்கோட்டை இடையே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-08 21:30 GMT
ஒரத்தநாடு, 


தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாசனத்திற்காக கல்லணைக்கால்வாய் மற்றும் அதன் பிரிவு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லணைக்கால்வாயில், கண்டிதம்பட்டு என்ற இடத்தில் இருந்து கல்யாணஓடை வாய்க்கால் பிரிகிறது.

இந்த வாய்க்கால் அங்கியிருந்து சூரக்கோட்டை, துறையூர், உளூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட ஒரத்தநாடு பகுதிகளை கடந்து பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கல்யாணஓடை வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த சில தினங்களாக வழக்கம் போல் பாசனத்திற்காக தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் ஒரத்தநாட்டை அடுத்துள்ள மேலஉளூர் அருகே இந்த வாய்க்காலில் நேற்று காலை ‘திடீர்’ உடைப்பு ஏற்பட்டது.

இதனால் மேலஉளூர், பருத்திக்கோட்டை, பருத்தியப்பர்கோவில், தும்பத்திக்கோட்டை, தென்னமநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்கதிர்களும் தண்ணீரில் சூழப்பட்டு சேதமடைந்தது.

வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், வாய்க்கால் உடைப்பை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் வாய்க்காலை ஒட்டி உள்ள பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் தண்ணீர் சூழ்ந்தது. அந்த வழியே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் தஞ்சை-பட்டுக்கோட்டைக்கு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்