31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 11 ஆண்டு ஜெயில் - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2018-10-08 22:45 GMT
திருவண்ணாமலை,

செய்யாறு தாலுகா சின்ன ஏழாச்சேரியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சுதாகர். இவர்களது குடும்ப நண்பர் காஞ்சீபுரம் மாவட்டம் வேதாசலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்.

இவர்களிடம் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா பெரும்படுகைகண்டிகை கிராமத்தை சேர்ந்த 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு வட்டிக்கு பணம் கடன் வாங்கி உள்ளனர். கடனை அவர்கள் சரியாக திருப்பி கொடுக்காததால், 3 குடும்பத்தை சேர்ந்த 31 பேரையும் சின்ன ஏழாச்சேரியில் உள்ள கல்குவாரியில் ராஜகோபால், சுதாகர், சந்திரசேகரன் ஆகியோர் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி உள்ளனர்.

அவர்களுக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.17 முதல் ரூ.25 வரை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு உதவி கலெக்டர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி கல்குவாரிக்கு சென்று 31 பேரையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார்.

அதில், 31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த ராஜகோபால், சுதாகர், சந்திரசேகரன் ஆகியோருக்கு தலா 11 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்