‘15 பேர் இறப்பார்கள் என்றதால் ராகு காலத்தில் பஸ் இயக்குவதை தவிர்த்தேன்’ ஜோதிடரின் அறிவுரைப்படி நடந்ததாக விளக்கமளித்த டிரைவர்

தாமதமாக பஸ் ஓட்டியதற்கு நோட்டீசு அனுப்பிய ‘டெப்போ’ மேலாளருக்கு, அரசு பஸ் டிரைவர் விளக்கம் அளித்துள்ளார். அவர், ‘ராகு காலத்தில் பஸ் இயக்கினால் 15 பேர் இறப்பார்கள் என்று ஜோதிடர் கூறியதாகவும், அதனால் ராகு காலத்தில் பஸ்சை இயக்கவில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.

Update: 2018-10-09 22:45 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில்(பி.எம்.டி.சி.) டிரைவராக பணியாற்றி வருபவர் யோகேஷ். இவர் மெஜஸ்டிக்கில் இருந்து சி.கே.அச்சுக்கட்டு் வழித்தடத்தில் பி.எம்.டி.சி. பஸ்சை ஓட்டி வருகிறார்.

யோகேஷ், தினமும் காலை 6.15 மணிக்கு பஸ்சை ஓட்ட தொடங்க வேண்டும். ஆனால் கடந்த மாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி காலை 6.15 மணிக்கு பஸ்சை யோகேஷ் எடுக்கவில்லை. மாறாக அவர் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் தாமதமாக காலை 7.35 மணிக்கு பஸ்சை ஓட்ட தொடங்கினார்.

இதுபற்றி அறிந்த டெப்போ மேலாளர் விளக்கம் அளிக்கும்படி டிரைவர் யோகேசுக்கு நோட்டீசு அனுப்பினார். அந்த நோட்டீைச பெற்ற யோகேஷ், பஸ்சை தாமதமாக ஓட்டியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். யோகேஷ் அளித்த விளக்கத்தின் விவரம் வருமாறு:-

கடந்த 31-08-2018 அன்று ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன். அப்போது, அவர் ராகுகாலத்தில் பஸ் ஓட்ட தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மீறி பஸ் ஓட்டினால் 15 பேர் உயிரிழக்க நேரிடும் என்று கூறினார். இதனால் ராகு காலத்தில் பஸ் இயக்குவதை தவிர்த்தேன். பயணிகளை காப்பாற்ற வேண்டி தாமதமாக காலை 7.35 மணிக்கு பஸ்சை ஓட்ட தொடங்கினேன்.

பி.எம்.டி.சி. கழகத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. டெப்போ மற்றும் போக்குவரத்து கழக அலுவலகங்களில் கனகஜெயந்தி, பசவஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி தினங்களில் பூஜை மற்றும் ஹோமம் நடத்துவது எவ்வளவு நம்பிக்கையானதோ, அதே நம்பிக்கை ஜோதிடர் கூறும் வார்த்தைகளிலும் உள்ளது. இதனால் இந்த பிரச்சினையை இப்படியே முடித்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் விளக்கமளித்து உள்ளார்.

இதுதவிர, பஸ்சில் தினமும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை எந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் யூகிக்கிறீர்கள்? ஒருவேளை பஸ்பாஸ் வைத்திருப்பவர்கள் அதிகமாக பயணித்தால் உங்களின் கணக்குப்படி எப்படி வருமானத்தை கொண்டு வருவது? என்பன போன்ற கேள்விகளையும் யோகேஷ், டெப்போ மேலாளரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவர் யோகேசின் இந்த விளக்கத்தை பார்த்து டெப்போ மேலாளர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்