2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை 17½ லட்சம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 17 ½ லட்சம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2018-10-09 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சந்தீப்நந்தூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் 7 பேருக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அதன் பின்னர் கலெக்டர் கூறியதாவது;-

ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே “சிறு குடும்பமே, ஓர் அர்த்தமுள்ள எதிர்கால ஆரம்பத்திற்கு உறுதுணை“ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆண், பெண் பாலின விகிதம் 1,023 ஆக உள்ளது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 17 லட்சத்து 50 ஆயிரத்து 176 உள்ளது. தமிழக அரசு, குடும்பநல திட்டத்தின் மூலம் தாய்சேய் நலத்தை மேம்படுத்தி, அதன் மூலம் பிறப்பு விகிதத்தையும், குழந்தை இறப்பு விகிதத்்தையும், மகப்பேறு இறப்பு விகிதத்தையும் குறைப்பதற்காக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், (2012) பிறப்பு விகிதம் 13.0 ஆகவும், இறப்பு விகிதம் 3.9 ஆகவும், சிசுமரண விகிதம் 21.8 ஆகவும், உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களின் இன்றியமையாத தேவைகளான உணவு, உடை இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுப்புற சூழல், சுகாதாரம் மற்றும் சிறந்த சமுதாய சூழ்நிலை ஆகியவை அனைத்தும் மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்கும்.மேலும், மக்கள் தொகை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது. எனவே ஒவ்வொருவரும் சிறு குடும்ப நெறியை பின்பற்றி அளவான குடும்பம் அமைத்து, வளம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரிதா ஷிரின், முதன்மைக்கல்வி அலுவலர் மனோகர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்