சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஓட்டல் தொழிலாளியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஓட்டல் தொழிலாளியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார்.

Update: 2018-10-09 22:45 GMT
சேலம்,

சேலம் மாநகரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஒருவருக்கும், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதுபற்றி தெரியவந்ததும் அந்த பெண்ணின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவர் தற்போது தீவட்டிப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அவருடன் மூத்த மகள் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் பிரியாணி மாஸ்டர் தனது மகளின் துணிகளை எடுப்பதற்காக அன்னதானப்பட்டியில் வசித்து வரும் தனது மனைவியின் வீட்டுக்கு வந்தார். அந்த நேரத்தில் அங்கு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் சப்-இன்ஸ்பெக்டரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது மோதலாக மாறியது. அப்போது இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பெண்ணின் கணவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக வீராணம் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்