மளிகை கடையின் ஓட்டை பிரித்து பணம், பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நீடாமங்கலம் அருகே மளிகைகடையின் ஓட்டை பிரித்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-09 22:30 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள கோயில்வெண்ணி பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் கடைகள் உள்ளன. இதில் ஜாகீர்உசேன் என்பவர் மளிகைகடை நடத்தி வருகிறார். இதன் அருகே சேர்மாநல்லூரை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் மின்சாதன பொருட்கள் விற்பனை கடையும், அம்மாப்பேட்டை வெங்கடேஷ் என்பவர் பேன்சி கடையும், பெரியக்கோட்டை அண்ணாதுரை என்பவர் போர்வெல் பணிக்கான குழாய் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜாகீர் உசேனின் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ஹார்லிக்ஸ், பூஸ்ட், செல் போன் ரீசார்ஸ் கார்டுகள் மற்றும் மளிகை பொருட்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

இதேபோல் மற்ற 3 கடைகளின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஓட்டின் கீழ்பகுதியில் அடைப்பு இருந்ததால் மர்மநபர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் அந்த 3 கடைகளிலும் திருட்டு போகவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடைகளின் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைய முடியாததால் மர்மநபர்கள் கடைகளின் பின்பக்க வழியாக ஓட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்