வேலூரில் நடந்த சிறப்பு முகாமில் 194 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

வேலூரில் நடந்த சிறப்பு முகாமில் 194 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Update: 2018-10-09 23:01 GMT
வேலூர்,

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். இயன்முறை மருத்துவர் பார்த்தசாரதி, பேச்சு பயிற்சியாளர் நளினி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மொபட் வழங்கினார். இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

அவர்களை கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் சுமதி, செந்தில்குமார், முத்து, கஜேந்திரன், கருணாகரன், தன்வீர் அகமது ஆகியோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். அதில் தகுதியுடைய 194 மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் விண்ணப்பித்த சிலருக்கு மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்துக் கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பல்வேறு பரிசோதனைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை கண்டறியப்படும். 40 சதவீதத்துக்கு மேல் ஊனத்தின் தன்மை காணப்பட்டால் அவர்களுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்