நாகர்கோவிலில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

நாகர்கோவிலில், லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-10 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார் குடியிருப்பு கீழ சங்கரன்குழியை சேர்ந்தவர் தவசிமணி (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம், இவர் ஆசாரிபள்ளத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் முன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது சிமெண்ட் மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. திடீர் என்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தவசிமணி ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். அப்போது லாரியின் முன் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் லாரி டிரைவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்