வேலூர் ஜெயில் அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி, ஜாமீனில் வந்தவர் காரை மடக்கி கும்பல் அட்டகாசம்

வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடியின் கார் மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி அவரை கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டப்பகலில் சினிமா காட்சி போல நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-10 21:45 GMT
வேலூர், 


வேலூர் சத்துவாச்சாரி மடத்தெருவை சேர்ந்தவர் தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (வயது 35). இவர் மீது கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் சத்துவாச்சாரி, வேலூர் தெற்கு, வடக்கு போலீஸ் நிலையங்களில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமாரை கொலை செய்து பாலாற்றில் புதைத்தனர். பின்னர் அனைவரும் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வீச்சு தினேசை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த வீச்சு தினேஷ் மீண்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி இரவு வீச்சு தினேஷ், கூட்டாளிகள் மணிகண்டன், நவீன் ஆகியோர் ரங்காபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி பதுங்கி இருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த சத்துவாச்சாரி போலீசார் 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் வீச்சு தினேஷ் நேற்று காலை 9.30 மணியளவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை காரில் அவரது கூட்டாளிகள் சந்துரு, வரதன் ஆகியோர் அழைத்து சென்றனர். காரை சந்துரு ஓட்ட, வீச்சு தினேஷ், வரதன் ஆகியோர் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தனர். கார் ஜெயில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலையை கடந்து வேலூர் டவுன் நோக்கி வேகமாக வந்தது. அப்போது திடீரென 3 மோட்டார் சைக்கிளில் 6 மர்ம நபர்கள் கையில் அரிவாளுகளுடன் காரை துரத்தியபடி வந்தனர்.

தொரப்பாடியில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காரை சுற்றி வளைத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை கார் மீது வீசினர். இதில், ஒரு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து மர்மநபர்கள் அரிவாள்களுடன் காரை நோக்கி வந்தனர்.

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த டிரைவர் சந்துரு, பின்னர் சுதாரித்து கொண்டு வேகமாக காரை ஓட்டி வந்து தெற்கு போலீஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தினார். தொடர்ந்து வீச்சு தினேஷ், வரதன், சந்துரு ஆகியோர் பாதுகாப்புக்கோரி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கிடந்த வெடிக்காத வெடிகுண்டு மற்றும் அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர் விஜய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த வீச்சு தினேஷ், வரதன், சந்துரு ஆகியோரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (கலால்) ஆசைத்தம்பி தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது வெடிகுண்டு வீசி ரவுடி வீச்சு தினேசை கொல்ல முயன்ற மர்ம நபர்கள் யார்? ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோத தகராறால் இந்த கொலை முயற்சி நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் சினிமா காட்சி போல வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே கார் மீது வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்