பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படுவதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப் படுவதை கண்டித்து மன்னார்குடியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-10 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்க கூடாது. மாணவர்கள் அனைவருக்கும் உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட முன்வரைவை திரும்ப பெற வேண்டும். இந்திய மருத்துவ குழுவை கலைத்து விட்டு மருத்துவ ஆணையத்தை உருவாக்கி மருத்துவ படிப்புக்கு நீட் மற்றும் எக்ஸ்சிட் தேர்வுகளை கட்டாயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி வாயில் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர் மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் கல்லூரி முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நல்லசுகம், மாவட்ட குழு உறுப்பினர் வினித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்க கூடாது. இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட முன் வரைவை திரும்ப பெற வேண்டும். மேன்மைதகு பல்கலைக் கழகம் என்ற பெயரில் ஜியோ பல்கலைகழகத்துக்கு மக்களின் வரிப்பணத்தை வழங்குவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்