சொத்து தகராறில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குத்திக்கொலை; அண்ணன் மகன் கைது

சொத்து தகராறில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகன் கைதானார்.

Update: 2018-10-10 23:15 GMT

போத்தனூர்,

கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் ஜமீல் அகமது (வயது 74). வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கும், அவருடைய அண்ணன் குடும்பத்துக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜமீல் அகமது நேற்று மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருடைய அண்ணன் மகன் ரிஸ்வான் (26) சொத்து பிரச்சினை தொடர்பாக அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜமீல் அகமதுவை சரமாரியாக குத்தி விட்டு தப்பிச்சென்றார். கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஜமீல் அகமது உயிருக்கு போராடினார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஜமீல் அகமதுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ரிஸ்வானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜமீல் அகமதுவை, ரிஸ்வான் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுவது, பின்னர் அவரை கீழே தள்ளி விடுவது, அவரை கத்தியால் சரமாரியாக குத்துவது உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்