திருவள்ளூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-10 22:00 GMT

திருவள்ளூர், அக்.11–

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 மாத நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கல்வி பணிகளை பாதிக்கக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோவலன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் கதிரவன், மாவட்ட பொருளாளர் பூங்கோதை, மாநில துணை செயலாளர் வாசுதேவன், மாநில செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 500–க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்