அரியலூரில் பலத்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூரில் நேற்று பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2018-10-10 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பொதுமக்கள் குடை பிடித்தப்படியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சாலையில் சென்றதை காண முடிந்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வந்தது. இதையடுத்து நேற்று அரியலூரில் மதியம் 2.30 மணிக்கு திடீரென்று காற்றுடன் பலத்த மழையாக சிறிது நேரம் கொட்டி தீர்த்தது.

அதனை தொடர்ந்து மழை மாலை வரை தூறிக்கொண்டிருந்தது. நேற்று மதியம் பெய்த மழையால் நடந்தும் செல்லும் ஆண், பெண்கள் குடை பிடித்தவாறு வேகமாக சென்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களும் மழையில் நனைந்தபடியும், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் குடைபிடித்து கொண்டும் சென்றதை காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கு களை எரியவிட்டபடியே சென்றனர். நேற்று விட்டு, விட்டு பெய்த மழையால் சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் கணிசமாக உயர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்