‘ஒரு வருட பாசப் போராட்டம் வென்றது’ பெண் மீது தொடரப்பட்ட குழந்தை கடத்தல் வழக்கு ரத்து

பெண்-குழந்தை இடையே ஒரு வருட பாசப்போராட்டம் வென்றது. அந்த பெண் மீது தொடரப்பட்ட குழந்தை கடத்தல் வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்ததுடன், இந்த உத்தரவு வேறு வழக்குக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தது.

Update: 2018-10-10 23:15 GMT
மதுரை,

நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஆண்டு, திருமணம் ஆகாத பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு அந்த பெண் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் ஹெலன் அனிதா. இவருக்கு குழந்தை இல்லை. இதற்காக அதே மருத்துவமனையில் ஹெலனும், அவருடைய கணவரும் சிகிச்சை பெற்றனர்.

இந்தநிலையில்தான் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய நர்சு கிரிஜா, ஹெலன் அனிதாவிடம் கூறுகையில், “குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு அதன் தாயார் தலைமறைவாகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்“ என்று தெரிவித்துள்ளார்.

அவரது யோசனைப்படி, அந்த ஆண் குழந்தையை ஹெலனும், அவரது கணவரும் தத்தெடுத்து ‘ஆரோன் நியூபிரைட்‘ என்று பெயர் வைத்து வளர்த்தனர். கிறிஸ்தவ ஆலயத்தில் குழந்தைக்கு ஞானஸ்ஞானம் செய்து சான்றிதழ் பெற்றனர். அதை தங்களின் குழந்தை போல் வளர்த்து வருகின்றனர்.

மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தையை ஹெலன் வளர்த்து வரும் தகவல் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு சில மாதங்களுக்கு முன்பு, தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் ஹெலனின் வீட்டுக்கு திடீரென வந்தனர். அவர்கள் குழந்தை ஆரோனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஹெலன் மற்றும் மருத்துவமனை நர்சு கிரிஜா ஆகியோர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் நாகர்கோவில் வடசேரி போலீசார் குழந்தையை கடத்தியதாக 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர். காப்பகத்தில் ஒப்படைத்த அந்த பச்சிளம் குழந்தையோ, ஹெலனை பிரிந்த ஏக்கத்தில் உணவு உட்கொள்ளாமல் தொடர்ந்து அழுதது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த அதிகாரிகள், மீண்டும் ஹெலனிடமே அந்த குழந்தையை கொடுத்துவிட்டனர்.

அதை தொடர்ந்து, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஹெலன், நர்சு கிரிஜா ஆகியோர் மனு தாக்கல் செயதனர். இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஹெலன் அனிதாவுக்கு குழந்தை தத்தெடுப்பு நடைமுறை பற்றி தெரியவில்லை. இருந்தாலும் மருத்துவமனையில் இருந்து கிடைத்த குழந்தையை தன் குழந்தையைப்போல் பாசத்துடனும், அரவணைப்புடனும் வளர்த்து வருகிறார். குழந்தைக்கு சட்டப்படி பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, ஞானஸ்தானம் சான்றிதழ் ஆகியவையும் பெற்றுள்ளார்.

அவரது வீட்டுக்கு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வந்து விசாரித்தபோது நடந்த சம்பவங்கள் எதையும் மறைக்காமல் அனைத்து உண்மைகளையும் கூறியிருக்கிறார். மனுதாரரின் இந்த செயல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் வருமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அந்த கேள்விக்கு ‘இல்லை‘ என்பதுதான் உறுதியான பதில்.

காப்பகத்தில் குழந்தை சேர்க்கப்பட்ட பின்பு, உணவு எதுவும் சாப்பிடாமல் ஏங்கியுள்ளது. மீண்டும் மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்ட உடன் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் குழந்தையின் நலனை முக்கியமாக கருத வேண்டும்.

எனவே மனுதாரர்கள் மீது போடப்பட்ட குழந்தை கடத்தல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. குழந்தை மனுதாரரிடம் இருக்க வேண்டும். 5 வயது வரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மனுதாரர் வீட்டிற்கு சென்று அவ்வப்போது குழந்தையை பார்வையிடலாம். ஆனால் இந்த உத்தரவு வேறு வழக்கிற்கு பொருந்தாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஹெலன், “இந்த வழக்கால் தனக்கும், குழந்தைக்குமான ஓராண்டு நடந்த பாசப்போராட்டம் இந்த தீர்ப்பின் மூலம் வென்றுவிட்டது” என மகிழ்ச்சியுடன் உறவினர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்