தொடர்ந்து மழை பெய்தும் நாகுடி களக்குடி குளத்திற்கு தண்ணீர் வரவில்லை விவசாயிகள் கவலை

தொடர்ந்து மழை பெய்தும், நாகுடியில் உள்ள களக்குடி குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2018-10-10 22:30 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி, மேற்பனைக்காடு, நெய்வத்தளி, வல்லவாரி, ஆயிங்குடி ஆகிய பகுதிகள் காவிரி கடைமடை பகுதிகள் ஆகும். கல்லணை கால்வாயில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பி கடைமடை விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தொடர்ந்து 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஆனால் தற்போது கடைமடைக்கு மிகவும் குறைவான அளவே தண்ணீர் வருகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் பல விவசாயிகள் இதுவரை விவசாய பணிகளை தொடங்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறந்தாங்கி, நாகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆங்காங்கே உள்ள குளங்களுக்கு மழைநீர் வரத்தொடங்கி உள்ளது. மேலும் தற்போது குறைவான அளவு காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும், அறந்தாங்கி, நாகுடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தற்போது விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியில் களக்குடி குளம் உள்ளது. இந்த குளத்தின் மழைநீர் வரத்துவாரி பகுதிகளில் வனத்துறை சார்பில் அதிக அளவில் தைலமரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தைலமரங் களின் நீர் தேவைக்காக வனத்துறை சார்பில் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நாகுடி பகுதியில் பலத்த மழை பெய்தும், நாகுடி களக்குடி குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வந்த பலத்த மழையின் காரணமாக நாகுடி களக்குடி குளத்திற்கு வரும் வரத்துவாரியை சுற்றியுள்ள பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது.

அந்த பகுதியில் வனத்துறை சார்பில் தைலமரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளதால், வனத்துறையினர் குளத்திற்கு வரும் தண்ணீரை அடைத்து ஆங்காங்கே தைலமரத்திற்காக தேக்கி வைத்து உள்ளனர். இதனால் வரத்துவாரியை சுற்றி மழைநீர் பெரிய குளம்போல் தேங்கி உள்ளது. ஆனால் ஒரு சொட்டு நீர் கூட மழைநீர் வரத்துவாரி வழியாக களக்குடி குளத்திற்கு வரவில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாகுடி களக்குடி குளத்திற்கு வரும் வரத்துவாரி பகுதிகளில் உள்ள தைலமரங்களுக்காக தோண்டப்பட்டு உள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைத்து களக்குடி குளத்திற்கு மழைநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்