குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-10-10 21:45 GMT
குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானையில் கோவில் பூசாரி அமர்ந்து கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு, முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து சென்றார். காலை 9 மணிக்கு கொடிப்பட்டம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

தொடர்ந்து காலை 9.10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் தசரா திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் கொடிமர பீடத்தை அலங்கரித்து, சோடஷ தீபாராதனை நடந்தது.

அப்போது கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங் களை எழுப்பி வழிபட்டனர். பின்னர் விரதம் இருந்து வரும் பக்தர்கள், கோவிலில் மஞ்சள் கயிறு எனும் காப்பு வாங்கி, அதனை பூசாரியிடம் கொடுத்து, தங்களது வலது கையில் அணிந்தனர்.

அம்மன் வீதி உலா

கோவிலில் காப்பு அணிந்த பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறையில் தங்கியிருந்து விரதம் இருந்து வரும் மற்ற பக்தர்களுக்கு காப்பு அணிவித்தனர்.

நேற்று மதியம் முதல் இரவு வரையிலும் சுவாமி- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முதலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அதிகாலையில் கோவில் கடலில் புனித நீராடி, செவ்வாடை அணிந்து, தரிசனம் செய்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் கடலில் புனித நீர் எடுத்து சென்று, கோவிலில் வைத்து வழிபட்டனர். பின்னர் அதனை பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு எடுத்து சென்று, அங்குள்ள தசரா பிறைகளில் தெளித்தனர்.

காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்க தொடங்கினர். இவர்கள் 10-ம் நாளில் கோவிலில் அந்த காணிக்கையை வழங்குவார்கள்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் ஆங்காங்கே இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

குலசேகரன்பட்டினம் பைபாஸ் ரோடு தருவைகுளத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. தருவைகுளத்தில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவும் இடவசதி செய்யப்பட்டு இருந்தது. தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரன்பட்டினம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதால், இரவில் மின்னொளியில் நகரம் ஜொலித்தது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை- திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தசரா திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், சமத்துவ மக்கள் கழக மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நிர்வாகி ஜெயகண்ணன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், தொழில் அதிபர்கள் தர்மராஜ், கனகராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் படகில் ரோந்து சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்