பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-10 22:00 GMT
நெல்லை, 


நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில், வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் அரசு பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் பொருத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள மண்டலம், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தனியார் ஆஸ்பத்திரிகள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் முதற்கட்டமாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில், துணி பைகள் மற்றும் காகித பைகளை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு, வரும் நவம்பர் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக செயல்படுத்தப்படும். அதன் பிறகு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி), மைதிலி (நெல்லை), சவுந்தரராஜன் (தென்காசி) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்