குட்டையில் மூழ்கடித்து வாலிபர் கொலை: கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல் அருகே முன்விரோதம் காரணமாக குட்டையில் மூழ்கடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-10-10 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சேவாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 22). இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி அங்குள்ள குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றிய புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முன்விரோதம் காரணமாக கோழிப்பண்ணை தொழிலாளர்களான அகரம் அய்யர்சாலை காலனியை சேர்ந்த அருள் (25), நவணி பள்ளிப்பட்டியை சேர்ந்த மணி (24) ஆகிய இருவரும் கார்த்திக்கை குட்டையில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் அருள், மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட அருள், மணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து அருள், மணி ஆகிய இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்