பிரபல ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது அடிக்கடி துன்புறுத்தியதால் பழி தீர்த்தோம் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியில் பிரபல ரவுடி கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அடிக்கடி துன்புறுத்தியதால் பழி தீர்த்தோம் என்று கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2018-10-10 22:15 GMT
திருச்சி,

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சந்துரு(வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது முதலியார் சத்திரத்தில் போலீஸ் பூத்தை அடித்து உடைத்த வழக்கு, வழிப்பறி, கொள்ளை, சங்கிலி பறிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சந்துரு அந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டு தாதா போல் வலம் வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த மேத்யூ என்பவரது நண்பரின் செல்போனை சந்துரு பறித்து கொண்டார். இது தொடர்பாக அவர் மேத்யூவிடம் கூறி உள்ளார். இதனால் மேத்யூ தனது தந்தை குணாவுடன் சேர்ந்து சந்துருவிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் சந்துரு தரப்பினருக்கும், மேத்யூ தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாலக்கரை போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சந்துரு, மேத்யூ இடையே முன்விரோதம் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் சந்துருவை போலீசார் பிடிக்க விரட்டி சென்றனர். அப்போது அவர் கீழே விழுந்ததார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் காலில் கட்டு போட்டு கொண்டு வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவர் இரவுநேரத்தில் கெம்ஸ்டவுன் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அங்கு மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சந்துருவின் கூட்டாளியான பாண்டி தன்னை ஒருவர் தாக்கி விட்டதாக சந்துருவிடம் கூறி உள்ளார். இது குறித்து தட்டி கேட்பதற்காக சந்துரு பாண்டியுடன் ஆட்டோவில் சென்றார்.

அப்போது அந்த ஆட்டோவை கம்பு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திடீரென 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். அவர்களை கண்டதும், சந்துருவும், பாண்டியும் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட முயன்றனர். அந்த கும்பல் பாய்ந்து சென்று இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பாண்டி வெட்டு காயங்களுடன் தப்பி ஓடினார். சந்துருவால் ஓட முடியாததால் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயம் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீஸ் துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் கோடிலிங்கம், பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முதல்கட்ட விசாரணையில் சந்துருவை முன்விரோதம் காரணமாக மேத்யூ, கவுரிஸ், ராபர்ட் கிங்ஸ்லி, அமல்ராஜ், பாண்டி என்கிற வீரமுத்து, தம்பையன் உள்பட 7 பேர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதில் கைதான 7 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “சந்துரு அந்த பகுதியில் அமர்ந்து கொண்டு எங்களை அடித்து சித்ரவதை செய்து வந்தார். முழங்கால் போட சொல்லி துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பொறுமையிழந்த நாங்கள் ஆட்டோவில் வந்த அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்று பழி தீர்த்தோம்“ என்று கூறினர்.

மேலும் செய்திகள்