நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியது மண்டல்களில் தேவி சிலை நிறுவி வழிபாடு

மும்பையில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி மண்டல்களில் தேவி சிலைகள் நிறுவி வழிபாடு செய்யப்படுகிறது.

Update: 2018-10-10 23:31 GMT
மும்பை, 

மும்பையில் நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி மண்டல்கள், அமைப்புகள் சார்பில் ‘தேவி’ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

நவராத்திரி கொண்டாட்டத்தின் உச்சமான கர்பா, தாண்டியா ஆகிய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நேற்று இரவு களை கட்டியது.

தேவி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அந்தந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்கள், ஆண்கள், இளையோர், முதியோர் என வயது பாரபட்சமின்றி அனைவரும் ‘தாண்டியா’ மற்றும் ‘கர்பா’ நடனம் ஆடி கலக்கினர். அவர்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து நடனமாடி அசத்தினர்.

தாண்டியா

குடிசை பகுதிகளில் உள்ள தெருக்களில் இளம்பெண்கள், ஆண்கள் தாண்டியா குச்சிகளை ஒருவருக்கொருவர் தட்டி பாட்டுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினார்கள். இந்த நடனங்கள் தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரையிலும் மும்பையை கலக்க உள்ளன.

மும்பையில் தமிழர்கள் நிர்வகித்து வரும் கோவில்களில் நவராத்திரி திருவிழா பூஜையுடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவில்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டு உள்ள கொலு அலங்காரங்கள் கண்ணை கவருகின்றன. நவராத்திரியின் 9 நாட்களிலும் கோவில்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. ஏராளமானோர் விரதம் மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்