மார்த்தாண்டம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 மாணவர்கள் கைது

மார்த்தாண்டம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 வாகனங்களை போலீசார் மீட்டனர்.

Update: 2018-10-11 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு பல புகார்கள் வந்தன. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 மேலும், சப்–இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு திருடர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில், மார்த்தாண்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி வந்த 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மார்த்தாண்டம் பேரை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் மகன் சிவபிரசாத் (வயது 19), மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன் வினோத் (21), மற்றொருவர் உண்ணாமலைகடையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரும் ஐ.டி.ஐ. மாணவர்கள்.

இவர்கள் பொது இடங்களில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதை கண்காணித்து, அவற்றை திருடி சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும், பல மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள்  கொடுத்த தகவலின் அடிப்படையில் 9 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்