எண்ணூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

எண்ணூரில், பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-10-11 22:30 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் ஜெ.ஜெ. நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரபு என்ற கிளிபிரபு (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, எண்ணூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரபு, அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெ.ஜெ.நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே பிரபு, பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், எண்ணூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய பிரபுவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.

10 பேரிடம் விசாரணை

பிரபு கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அவர் கடைசியாக யாருடன் சென்றார்?. அவரது செல்போனில் பேசியவர்கள் யார், யார்?, அவருக்கு வேறு யாருடன் மோதல் உள்ளது? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாதவரத்தைச் சேர்ந்த முகமதுரபீக்(33), காசிமேட்டை சேர்ந்த ராமு(28) உள்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையான பிரபுவுக்கு வசந்தி என்ற மனைவியும், ஜெனி, ரீனா என 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்