ஓணாங்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

ஓணாங்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

Update: 2018-10-11 22:45 GMT
அரிமளம்,

அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வைத்தியலிங்கம் மனைவி வீரம்மாள் என்பவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு வீடு கட்டி கொள்ள இலவசமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆழ்குழாய் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மோட்டார் அறை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதாக வீரம்மாள் தரப்பில் திருமயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வீரம்மாளுக்கு வழங்கப்பட்ட இடத்தில் யாரும் அத்துமீறி நுழைய கூடாது என கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை யடுத்து அந்த இடத்தில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். கோர்ட்டு உத்தரவு இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓணாங்குடியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் காலிக்குடங்களுடன் மறியல் செய்ய முயன்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்களிடம் துணை கலெக்டர் சசிகலா (மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை), பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், அரிமளம் வட்டார வளர்ச்சி அதிகாரி ரவி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவுரி, செந்தமிழ்செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 19-ந்தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெறும். அதில் இருதரப்பினரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதுவரை சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்