ரெயில் மேற்கூரையில் ஏறிய வாலிபர் உடல் கருகினார் மின்சாரம் தாக்கியது

ரெயில் மேற்கூரையில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உடல் கருகினார்.

Update: 2018-10-11 22:30 GMT
மும்பை,

மும்பையில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 9 மாதத்தில் 11 பேர் மின்சார ரெயில் மேற்கூரையில் பயணம் செய்த போது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர். பயணிகள் ரெயில் மேற்கூரையில் பயணம் செய்வதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.

இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு சி.எஸ்.எம்.டி. ரெயில்நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் ஒன்று புறப்பட தயாராக நின்றது. அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மின்சார ரெயிலின் மேற்கூரையில் ஏறி பயணம் செய்ய முயன்றார்.

அப்போது மேற்கூரையில் ஏறிய வாலிபர் ஓவர்ஹெட் மின்கம்பியை தெரியாமல் தொட்டு உள்ளார். இதில் அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் உடல் கருகி படுகாயமடைந்த வாலிபரை அங்கு இருந்த ரெயில்வே போலீசார் மீட்டு அருகில் உள்ள ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 50 சதவீதம் தீக்காயம் அடைந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவர் நவிமும்பையை சேர்ந்த சாந்தனு (வயது 30) என்பது தெரியவந்தது.

அவர் மீது ரெயில்வே போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்