கடலூரில் 10 நாட்களாக குடிநீர் வராததால்: காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

கடலூரில் 10 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-10-11 22:00 GMT
கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வந்தது. இதை பாட்டில்களில் பிடித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்து, தங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பும் அதேபோல் அந்த பகுதியில் உள்ள பொதுகுழாய்களில் பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்தனர். ஆனால் அந்த தண்ணீரும் சாக்கடை கலந்து வந்தது. துர்நாற்றமும் வீசியதால் ஆத்திரமடைந்த அவர்கள், குடிநீரை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக போடப்பட்ட குழாயை குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் துண்டித்து, அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த 10 நாட்கள் ஆகியும், குடிநீர் குழாயை சரி செய்து, அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த போடிச்செட்டி தெரு பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் காலி குடங்களை கையில் வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். அதுவும் சுகாதாரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமசாமி மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் அப்பகுதி மக்களுக்கு நகராட்சி லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தண்ணீர் பிடித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தங்களுக்கு தினந்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்