நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கண் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி நடைபெற்றது. இதை சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-11 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மாவட்ட ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து உலக பார்வை தினத்தை முன்னிட்டு கண் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று நடத்தின.

இந்த நிகழ்ச்சிக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் உஷா தலைமை தாங்கினார். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் செல்வ குமார், நிலைய மருத்துவ அலுவலர் கண்ணப்பன், நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் ரங்கநாதன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பார்வையிழப்பு ஏற்பட முக்கிய காரணம் கண் புரையாகும். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பார்வையிழப்பை தடுக்கலாம்.

பொதுவாக வயதான முதியவர்கள் குறிப்பாக பெண்கள், குடும்பத்தினரால் சரியாக கவனிக்கப்படாத காரணத்தால் கண்களில் ஏற்படும் புரையினால் பார்வை இல்லாதவராக சிரமப்படுகிறார்கள். இவர்களின் பார்வையை காக்க ஒவ்வொரு வீட்டிலும் உள்ள முதியவர்களை ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

கண்புரையால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள முதியவர்களின் கண்நலம் காக்க முன் வர வேண்டும். இதேபோல் ஒவ்வொரு கிராமத்தையும் கண்புரை இல்லாத கிராமமாக உருவாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஒளிவிழி பரிசோதகர்கள் கண்ணன், ரவி, அரவிந்த் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்