முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தினை நடத்தினர்.

Update: 2018-10-11 22:07 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஈ.-நாம் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சென்றனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து ஈ-நாம் திட்டம் தொடர்பாக பேசினர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம், ஊழியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை., தீபாவளி போனஸ் கடந்த ஆண்டு தரவில்லை. போதுமான நிதி இல்லாததால் இந்த நிலை உள்ளது என்று கூறினர்.

இதனை கேட்ட உடன் பா.ஜ.க. நிர்வாகிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இங்கு ஊழல், முறைகேடுகள் நடக்கிறது. எனவே அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

இது குறித்து சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறும் போது, “ஈ-நாம் திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்கியும் புதுவை அரசு அதனை சரியாக பயன்படுத்தவில்லை. ஈ-நாம் திட்டத்தில் நிதி ஒப்புதல் வழங்கப்பட்ட வேலைகளுக்காக செலவு செய்யாமல் வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஊழல், முறைகேடுகள் அதிக அளவில் நடக்கிறது. எனவே கவர்னர் கிரண்பெடி களஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கு நடைபெறும் அனைத்து ஊழல்களையும், முறைகேடுகளையும் வெளிக்கொண்டு வர வேண்டும். அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்