கேட்டை திறக்காததால் தியேட்டர் ஊழியரின் கைவிரலை கடித்து துண்டாக்கியவர் கைது

சேலத்தில் கேட்டை திறக்காததால் தியேட்டர் ஊழியரின் கைவிரலை கடித்து துண்டாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-11 23:04 GMT
சேலம்,

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பர் கண்ணனுடன் நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க வந்தார். பின்னர் அவர்கள் அங்கு ஆங்கில திரைப்படம் ஒன்று பார்த்தனர். இவர்கள் படம் முடிவதற்குள் தியேட்டரில் இருந்து வெளியே வந்தனர்.

அப்போது தியேட்டர் முன்பக்க கேட்டு பூட்டப்பட்டிருந்தது. அங்கு பணியில் இருந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஊழியர் சேட்டு (25) என்பவரிடம் கேட்டை திறந்து விடுமாறு கூறினர். மேலும் அவர்கள் மதுபோதையில் இருந்ததால், கேட்டை ஏன்? திறந்து வைக்கவில்லை என்று கூறி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தியேட்டர் ஊழியர் சேட்டுவின் வலது கையின் ஆள்காட்டி விரலை பிடித்து கடித்தார். இதனால் வலியால் சேட்டு அலறி துடித்தார். இருந்தாலும் விடாமல் கடித்து அவருடைய கைவிரலை துண்டாக்கினார். இதனால் அதிகளவு ரத்தம் வெளியேறியதால் சேட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு விரலை பொருத்தும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து ஊழியரின் கைவிரலை கடித்து துண்டாக்கிய சதீஷ்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்