கஞ்சா விற்ற மாமனார், மருமகள் உள்பட 5 பேர் கைது

கஞ்சா விற்ற மாமனார், மருமகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-12 21:30 GMT
தேனி,


தேனி அருகே கோடாங்கிபட்டி கூட்டுறவு சொசைட்டி தெருவில் உள்ள ஆங்கத்தேவர் (வயது 75) என்பவருடைய வீட்டில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 14 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்ற ஆங்கத்தேவர், அவருடைய மருமகள் சாந்தி (37) ஆகிய 2 பேரையும் கைது செய் தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் இவர்களுக்கு விற்பனைக்காக கஞ்சா வழங்குவது யார்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை அறிவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டமனூர் வனத்துறையினர் கொம்புக்காரன்புலியூர் சோதனைசாவடியில் நேற்றுமுன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா கொண்டு வந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்த மூர்த்தி(23), சுரேஷ்(22) என்பதும், வருசநாட்டில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வருசநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி மற்றும் போலீசார் நேற்று காலை சிங்கராஜபுரம் அருகே உள்ள அல்லால் ஓடை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வருசநாடு அருகே உள்ள காந்திகிராமத்தை சேர்ந்த உதயக்குமார்(47) என்பவர் விற்பனைக்காக ஒரு பையில் 6 கிலோ கஞ்சா கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்