ஊத்துக்கோட்டை அருகே வறுமையால் வாடிய எலக்ட்ரீசியன் தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே வறுமையால் வாடிய எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-12 22:15 GMT
ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). எலக்ட்ரீசியன். இவருக்கு மஞ்சுளா (38) என்ற மனைவியும், ஷேசாத்திரி (14), சாரதி (12) என்ற மகன்களும் உள்ளனர். முருகன் குடும்பத்தினருடன் ஊத்துக்கோட்டையில் உள்ள சுதர்சனம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இப்படி சிகிச்சை பெறுவதற்காக சம்பாதிக்கும் பணமெல்லாம் முருகன் செலவு செய்து வந்தார்.

இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. வறுமையை போக்க மஞ்சுளா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நோய் வாய்ப்பட்ட கணவரை பார்த்து கொள்வதற்காக மஞ்சுளா சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் நிறுவனம் அவரை சில நாட்களுக்கு முன் வேலையில் இருந்து நிறுத்தி விட்டது.

இதனால் முருகனின் குடும்பம் வறுமையில் வாடியது. மிகவும் கவலையுற்று இருந்த முருகன் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தில் துரைசாமி நாயுடு என்ற விவசாயிக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்க வாளியை தொங்க விடும் கம்பியில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியபடி காணப்பட்டார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தவகல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் முருகன்தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்