ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற பெரம்பலூர் பள்ளி மாணவி

ஆங்கில பாடப்புத்தகத்தில் பெரம்பலூர் பள்ளி மாணவி இடம் பெற்றுள்ளார்.

Update: 2018-10-13 00:00 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருபவர் ராஜமாணிக்கம்(வயது 18). இவர் கடந்த ஜனவரி மாதம் கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான 19 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார். இதில் 40 முதல் 42 கிலோ எடை பிரிவில் விளையாடி 3-ம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதையொட்டி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களை கவுரவிக்கும் வகையில் டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவிகளின் புகைப்படத்துடன், ராஜமாணிக்கத்தின் பெயருடன் தமிழக அரசு சார்பில் பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட 2-ம் பருவ ஆங்கில பாடப்புத்தக்கத்தில் 109-ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

ராஜமாணிக்கம், மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உசிலம்பட்டி அருகே உள்ள மேலதிருமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுப்பையா- சந்தனம் தம்பதியின் மகள் ஆவார். இவர் டி.ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது தடகளம், கால்பந்து மற்றும் டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்றார். இதில் டேக்வாண்டோ போட்டியிலும் அதிக கவனம் செலுத்திய ராஜமாணிக்கம், அதற்கு தனியாக பயிற்சி பெற, குடும்பத்தில் பண வசதி இல்லை என்பதால் 10-ம் வகுப்பு முடித்த பின்னர் பெரம்பலூரில் உள்ள பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் சேர்ந்தார்.

அவருக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணியராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் ஆகியோர் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இதைத்தொடர்ந்தே அவர் தேசிய அளவிலான போட்டியில் 3-ம் இடம் பிடித்தார். பாடப்புத்தகத்தில் அவருடைய படம் இடம் பெற்றதை தொடர்ந்து, அவரை பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் மற்றும் பயிற்சியாளர்கள், சக மாணவிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சரை மாணவி ராஜமாணிக்கம் சந்தித்து பாராட்டு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்