வாலிபர் கொலையில் துப்பு துலங்கியது 4 பேர் கோட்டில் சரண்; ஒருவர் கைது பரபரப்பு வாக்குமூலம்

மாமல்லபுரம் அருகே வாலிபர் கொலையில் துப்பு துலங்கியது. இந்த வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2018-10-12 23:22 GMT
மாமல்லபுரம்,

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை சாலை ஓரம் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்புராஜ் மேற்பார்வையில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 24) என்பதும், காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடத்தில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 5 பேரில் மோகன்ராஜ் (37), சிவசங்கரன் (27), மதியரசன் (24), முகிலன் (23) ஆகிய 4 பேர் விழுப்புரம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர். மற்றொருவரான ஜெயராமன் (28) மாமல்லபுரத்தில் நேற்று சிக்கினார்.

இக்கொலைக்கான காரணம் குறித்து ஜெயராமன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

அருண்பிரகாசின் பெரியம்மா மகள் இந்திரா என்கிற சுந்தரவள்ளி (36) கணவரை பிரிந்து புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜூடன், தொடர்பு ஏற்பட்டு அவரை இந்திரா 2-வது திருமணம் செய்து கொண்டார். மோகன்ராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் மகள்களுக்கு மோகன்ராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரெட்டியார்பாளையம் போலீசில் இந்திரா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோகன்ராஜை கைது செய்து காலாபேட்டை சிறையில் அடைத்தனர். இந்திராவுக்கு அவரது தம்பி அருண்பிரகாஷ் இந்த வழக்கில் பக்கபலமாக இருந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த மோகன்ராஜ் தன்னை சிறைக்கு அனுப்பிய இந்திராவை பழிவாங்க அவருக்கு பக்கபலமாக இருந்த அவருடைய தம்பி அருண்பிரகாசை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். இதற்காக புதுச்சேரியை சேர்ந்த தனது கூட்டாளிகள் சிவசங்கரன், மதியரசன், முகிலன், ஜெயராமன் ஆகியோருடன் ஒரு காரில் மாமல்லபுரம் அருகில் உள்ள கோவளத்துக்கு வந்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

பிறகு மோகன்ராஜ், அருண்பிரகாசுக்கு போன் செய்து மது அருந்த வண்டலூருக்கு அழைத்தார். அங்கு வந்த அருண்பிரகாசை அழைத்து கொண்டு மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேரும் கோவளம் அருகில் உள்ள திருவிடந்தை சவுக்கு தோப்புக்கு சென்றனர். அங்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கு ஏறியதும் அருண்பிரகாஷ் தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து 5 பேரும் கொலை செய்தனர்.

பின்னர் 5 பேரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். போலீசார் தேடியதால் மோகன்ராஜ், சிவசங்கரன், முகிலன், மதியரசன் ஆகிய 4 பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையின்போது ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினார்.

கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேர் உள்பட இந்த வழக்கில் சிக்கிய 5 பேரிடமும் மேலும் விசாரணை நடத்த மாமல்லபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்